04 May 2011

மூன்று தலைமுறை காதல்!

Posted by lavanyan gunalan 12:30 AM, under | No comments

அன்று கண்ணோடு கண் பார்த்து காதல் வளர்த்தவர்கள், இன்று எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்க்கிறார்கள். இப்படி காதலின் வெளிப்பாடு மாறினாலும், தலைமுறைகள் தாண்டியும் மாறாமல் இருப்பது காதல் மட்டுமே. அப்படிப்பட்ட மூன்று தலைமுறைக் காதலர்களின் காதல் வாழ்க்கை.

மதம் கடந்த காதல்

இவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவங்க. 2002-ல் காதலிக்க ஆரம்பிச்சபோது, ரெண்டு வீட்ல இருந்தும் நிறைய எதிர்ப்பு. வீணா - பாஷாங்கிற பேரைப் பார்த்தாலே தெரியலையா... இந்து, முஸ்லீம் காதல்னு. ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பார்க்கும்போதுதான் இவங்களுக்குள்ளே காதல் முளைச்சது. காதல் வளர வளர ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு எதிர்க்க ஆரம்பிச்சாங்க.


ஒரு முஸ்லிம் தன்னுடைய மதச் சட்டப்படி வேற மதத்தைச் சேர்ந்தவங்களை கல்யாணம் பண்ணக் கூடாது. அப்படியே பண்ணாலும், அவங்களை முஸ்லிமா மதம் மாத்திதான் கல்யாணம் பண்ணமுடியும். இந்த விஷயத்தை பாஷா சொன்னபோது, வீணா முகத்தைப் பார்க்கணுமே அதிர்ச்சி, ஆச்சரியம் ரெண்டுமே இல்லாமல் தெளிவா இருந்தது.

‘என்ன அமைதியா இருக்கே’ன்னு பாஷா கேட்டதுக்கு, ‘இது எனக்கு ஏற்கனவே தெரியும்’னு வீணா சொன்னது பாஷாவுக்குதான் ஆச்சரியமா இருந்தது.

‘அப்ப நீ மதம் மாற தயாரா இருக்கியா... மதம் மாறினா பர்தா போடணும்... தினமும் அஞ்சு வேளை தொழுகை நடத்தணும்... இதுக்கெல்லாம் உனக்கு சம்மதமா...’

‘நீதான்னு ஆனபிறகு, இஸ்லாம், பர்தா, தொழுகை எல்லாம் எனக்கு பிடிக்காம இருக்குமா?’ - வீணா பளிச்சுன்னு பதில் சொன்னதும் பாஷா மனசுல பட்டாம்பூச்சிகள் பறந்தன.

பாஷாவும் வீணாவும் ரொம்பவே புரிஞ்சிக்கிட்டாங்க. ஆனா, ரெண்டு வீட்டுலயும் இவங்களை புரிஞ்சுக்கலை. எதிர்த்துட்டுதான் இருந்தாங்க.

‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே... நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்... நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்’னு பைபிள்ல சொல்றமாதிரி, மெரீனா பீச் இவங்களைப் பார்த்து சொல்லுச்சு. ஆமாம், துவண்டுபோற நேரத்துல எல்லாம், கடல் காத்தும் அந்த அலைகளும்தான் இவங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கு.

‘எப்படி கடல் ஓயாமே அலையடிச்சுட்டு இருக்கோ, அப்படிதான் நம்ம காதலும் ஓயாம இருக்கணும்’னு கண்ணியமா காதல் சபதம் ஏற்றது நம்ம காதல் ஜோடி. இடைவிடாத முயற்சியில 2009-ல் திருமணமும் நடந்தது. இப்ப வீணா, தன் பெயரை ‘தபஸம்’னு கெஸட்லேயும் மாத்திக்கிட்டாங்க. பாஷாவுக்கும் தபஸமுக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு. பெயர் ரேஹான் உசேன். மதத்தைக் கடந்த காதலுக்கு கிடைச்ச பரிசு அந்தக் குழந்தையின் சிரிப்பு!

எதிர்பில் வளர்ந்த காதல்

கோயமுத்தூர்ல, ஒரு கல்யாண வைபவத்துல காதல் வைபவம் தொடங்கிய ஜோடி இவங்க. அது 1993. பொன்.சுதா - சினிமா அஸிஸ்டன்ட் டைரக்டர். சென்னையில வாசம். உமா - கல்லூரி மாணவி. கோவை பொண்ணு. இவங்க அறிமுகம் ஆனது, காதல் துளிர்விட்டது எல்லாமே இந்த கல்யாணத்துல தாங்க. மாப்பிள்ளை தோழனா பொன்.சுதாவும், மணப்பெண் தோழியா உமாவும் இருக்கவேண்டியதாப் போச்சு. இந்த தோழன் - தோழி உறவுதான், இவங்களுக்கு உள்ளே ரசாயன மாற்றத்தை உண்டுபண்ணுச்சு.இந்த மாற்றம் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது. ஆனா, ரெண்டு பேருக்கும் நிகழ்ந்துருச்சு. இருந்தாலும் பொன்.சுதாவுக்கு கொஞ்சம் தயக்கம். ‘பார்த்ததுமே காதலா... இதைச் சொன்னா, அந்தப் பொண்ணு நம்மளை என்ன நினைக்கும்’னு சங்கடத்தோடு நெளிஞ்சாரு மனுஷன்.

‘சொல்லாமல் போகிற காதல் பலிக்காது’னு அனுபவஸ்தர்கள் சொல்வாங்க. இதை உமா புரிஞ்சுக்கிட்டாங்க. ஒரு கைக்கடிகாரத்தை வாங்கிட்டு, பொன். சுதாவை பார்க்கப் போனாங்க. உமா, தன் காதலை சொன்னதும், மனுஷன் அலாரம் அடிச்சமாதிரி அலறினாரு. ‘என்ன நீயும் என்னை காதலிக்கிறீயா... இது முன்னயே தெரிஞ்சிருந்தா நான் முந்தியிருப்பேனே’ன்னு லேசான இதய அதிர்ச்சி ஏற்பட்டுச் சிரிச்சார்.

காதல் ரயில் ஓட ஆரம்பிச்சது. வாரம் ஒருமுறை சென்னைக்கும் கோவைக்கும் இடையே டெலிபோனில் காதல் டிரிங்... டிரிங்... மாசம் ஒருமுறை நேருக்குநேர். இப்படி காதல் வளர்ந்துட்டு வர்ற நேரத்துலே உமா வீட்டுக்கு காதல் நிலவரம் தெரிந்து, கலவரமானது. உமா ஹவுஸ் அரெஸ்ட்.

‘என் மக கலெக்டர் ஆகப்போறா... அவளுக்கு இப்போ காதல் கத்திரிக்கா யெல்லாம் வேணாம். மீறி ஏதாவது நடந்தா, நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்’ - உமா வீட்டிலிருந்து பொன்.சுதாவுக்கு இப்படி மிரட்டல்.

‘நீங்க இந்த ரூட்டில் போனா, நாங்க வேற ரூட்டில் போவோம்’னு ரெண்டு பேரும் முடிவு பண்ணாங்க. ரகசிய ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தது. கல்யாணத் துக்குப் பிறகு எதுவுமே நடக்காதமாதிரி ரெண்டுபேரும் அவங்கவங்க வீட்ல இருந்தாங்க. ஆனா, கொஞ்சநாள்ல பொன்.சுதா வீட்டுக்கு இந்தக் கல்யாண விவகாரம் தெரிஞ்சும், தெரியாத மாதிரி இருந்தாங்க.

காதல் நாயகிக்கு படிப்பு முடிஞ்சதும் அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து
நின்னார் நம்ம காதல் நாயகன். சமாதானமாகி மாப்பிள்ளை சொந்தங்கள் இணைந்து திருமணத்தை முடிச்சது. விஷயம் பொண்ணு வீடு வரைக்கும் போனது. ‘இனிமேலும் நாம சும்மா இருந்தா நாகரிகமா இருக்காது. பொண்ணு நம்மளை என்னா நினைப்பா...’னு நினைச்ச பொண்ணு வீட்டார், தம் பங்குக்கு திருமண வரவேற்பு நடத்தி, மாப்பிள்ளையோடு கை குலுக்கினாங்க. 

கல்யாணத்துக்குப் பிறகு அசிஸ்டன்ட் டைரக்டர் பொன்.சுதாவும் உமாவும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பிச்சாங்க. சினிமா கனவோடு கணவன் வலம் வருவதால், வரும்படி இல்லாத குடும்பத்தை கவனிக்க தானே தயாராகிவிட்டார் மனைவி.

குடும்பம் சுழல ஆரம்பித்தது. பொன்.சுதா இரண்டு குறும்படங்களை இயக்கி 22 விருதுகள் பெற்றிருக்கிறார். அடுத்து சினிமாவை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பவருக்கு இப்போது, இரண்டு குருத்துகள்: அன்புமதி, அனிச்சமலர்!

கடிதம் வளர்த்த காதல்

இது 70களில் நடந்த காதல். ரெண்டு பேரும் ஒரே மாவட்டம். ஒரே ஊர். ஒரே தெரு. அடுத்தடுத்த வீடு. இந்த நெருக்கம்தான் இவங்களுக்குள்ளகாதலை வளர்த்துச்சு. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம்தான் நம்ம முதல் தலைமுறை காதலர்களோட ஸ்பாட். உஷா பள்ளிக்கூட மாணவி. பாலு பி.ஓ.எல் (Bachelor Oriental Language) முடிச்ச விவரப்புள்ளி. (பி.ஓ.எல். பட்டம் இப்ப கிடையாது) உஷாவுக்கு ரெண்டு அண்ணன். ரெண்டு தம்பி. அப்பா இல்லை. அம்மாதான். பாலு தனிக்காட்டு ராஜா. கம்யூனிஸ்ட் பாதையில போற இடதுசாரி.


உஷா ராணியோட மூத்த அண்ணனும் பாலசுப்ரமணியனும் கட்சி தோழர்கள். பாலு வீட்டுக்கு உஷா அண்ணன் வர்றதும், உஷா வீட்டுக்கு பாலு போறதும் வழக்கம். இப்படி நம்ம நாயகன், நாயகி வீட்டில் அடிக்கடி வலம் வருவார். பள்ளி படிப்புல உஷாவுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் திருவாளர் பாலுதான் டியூஷன் மாஸ்டர். கல்வி பரிவர்த்தனை நடக்கும்போதெல்லாம், இவங்களுக் குள்ளே காதல் பரிமாற்றமும் நடக்கும்.

இப்படி கல்வி தோட்டத்தில் காதல் பூ மலர்ந்தபோது, இடையில் ஒரு நாள் மடல் ஒன்று தீட்டினார் உஷா.

‘அன்புள்ள பாலு, உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது - அன்புடன் உஷா.’ இதுதான் எழுபதுகளின் காதல் எஸ்எம்எஸ்.

உஷா வீட்டுக்கு பாலு போய்வரும் படலம் இப்போது அதிகமானது. உஷாவின் அம்மா புரிந்துகொண்டார். பாலுவை தனியாகச் சந்தித்து கேட்டார்... ‘என்னப்பா இப்படி பண்ணிட்டே...’ - இந்தக் கேள்வி பாலுவுக்கு புரிந்துவிட்டது. ஆனால், பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாக நகர்ந்துவிட்டார். அதன்பிறகு, வீட்டுக் காதல் குளத்துக் காதலாக மாறிப்போனது.

குளத்துக்கு உஷா மட்டும்தான் குளிக்க வருவது வழக்கம். இப்போது பாலுவையும் குளத்துப் பக்கம் பார்க்க முடிந்தது. மூணு பேருக்கு தெரிஞ்ச காதல் இப்போ ஊருக்கே தெரிய ஆரம்பிச்சது. இந்த நேரத்தில், உஷாவின் இரண்டாவது அண்ணனுக்கு பாண்டிச்சேரியில் வேலை கிடைக்க, குடும்பமே பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தது.

பாண்டிச்சேரியிலும், கடலூரிலுமாக காதல் தொடர்வண்டி பிரிந்து இருந்தது. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு ஒருநாள், போஸ்ட் மேன் பாலு வீட்டுக் கதவை தட்டினார், ‘சார் போஸ்ட்...’ - பாலு நண்பர், உஷா அண்ணனிடமிருந்து கடிதம்.

‘நீங்களும் உஷாவும் பிரிந்து இருந்தாலும், உஷா மனதில் நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். உங்கள் காதலில் சிவப்பு விளக்கு போய், இப்போது மஞ்சள் விளக்கு எரிகிறது...’ - கடிதத்தை படிச்சதும் பாலு நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். இப்போ பாலு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் முடிச்சிருந்தார். படிப்பு முடிச்சு, கம்யூனிஸ்ட் கூட்டங்களில் சுற்றிக்கொண்டு இருந்தவருக்கு ஒருநாள் மெட்ராஸிலிருந்து லெட்டர் வந்தது.

‘அன்புள்ள பாலுவுக்கு, உஷா எழுதுவது. நாங்கள் இப்போது சென்னையில் வசித்து வருகிறோம். நான் ஆயிரம்விளக்கில் உள்ள சீட்டு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். நீங்கள், சென்னை வந்து என்னை அழைத்துப் போங்கள்...’ - உஷா கடிதம் எழுதியது சீட்டு கம்பெனி முதலாளிக்கும் தெரியும்.

பாலு, சென்னை வந்ததும் உஷாவை முதலாளியே அனுப்பிவைத்தார். சென்னையிலேயே இருவருக்கும் வீடு பார்த்துக் கொடுத்தார். தாலி கட்டாமலேயே தம்பதிகளாகிவிட்டனர்; குழந்தையும் உண்டானது. 

அக்கம்பக்கத்து வீட்டார் உஷாவை பயமுறுத்தினார்கள். ‘தாலி இல்லாமல் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு போனா, நர்ஸ் திட்டுவாங்க. சந்தேகப் படுவாங்க. எதுக்கும் ரெண்டுபேரும் யோசிச்சு முடிவெடுங்க...’

‘உண்மைதான். வாழ்பவர்களுக்குள் புரிதல் இருந்தாலும், தாலி இல்லாமல் போனால், இந்தச் சமூகம் பின்னாடியும் பேசும்; முடிந்தால் முன்னாடியும் பேசும்’ - பாலு சுதாரித்துக்கொண்டு, உஷா கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறைக் கட்டினார். பெண் குழந்தை பிறந்தது.

பிறகு, தீக்கதிர் நாளிதழில் செய்தி ஆசிரியராகச் சேர்ந்தார். இரண்டாவதும் பெண் குழந்தை. இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி, இப்போது பேரன் - பேத்திகள் வந்துவிட்டார்கள். காலமெல்லாம் வாழும் காதல், இவர்கள் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

- சா.இலாகுபாரதி
நம் தோழி - பிப்ரவரி 2011
படங்கள்: கமல்

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு