07 May 2011

மே 13க்குப் பிறகு என்ன நடக்கும்?

Posted by Show Now 11:48 PM, under | 1 comment


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதுமே மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது. இந்தமுறை சமையல் எரிவாயு விலையையும் கணிசமாக உயர்த்த இருக்கிறார்கள். அதனால், பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 70 ரூபாய் வரை தொடும் என்று கூறப்படுகிறது.

எதற்காக தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்? அறிவிப்பதென்றால் இப்போதே அறிவிக்கலாமே என்றுதானே கேட்கிறீர்கள். அதில்தான் ஒரு சூட்சமம் இருக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் மட்டுமே விலை உயர்வு கணிசமான அளவில் இருக்கும். இல்லாவிட்டால் பெட்ரோலிய நிறுவனங்கள், ரெண்டையும் பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்போது பெயரளவுக்கு 2 ரூபாய் வரைக்கும் உயர்த்தப்படலாம். (அப்போதுதானே அடுத்தகட்ட தேர்தலிலாவது தப்பிப் பிழிக்க முடியும்) வெற்றிப்பெற்றுவிட்டால், பெட்ரோல் - டீசல் விலை 5 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சமையல் எரிவாயு விலை மாற்றியமைக்கப்படும். அது ரூபாய் நானூரை தாண்டலாம்!

பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் துபாய் போன்ற நாடுகளில் 5 லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதே 5 லிட்டர் பெட்ரோல் தமிழ்நாட்டில் 325 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சரி ஏற்றுமதி செய்கிற நாட்டைவிட இறக்குமதி செய்கிற நாட்டில் பொருளின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் கிட்டத்தட்ட ஐந்தரை மடங்கு அளவுக்கா கூடதல் விலை இருக்கும் என்பதுதான் என் கேள்வி.

சரி அப்படியே ஐந்தரை மடங்காக பெட்ரோலியப் பொருட்களின் விலை இருந்தாலும்கூட இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் அரசாங்கம்தானே அந்தப் பொருளை மாநிய விலையில் வழங்க வேண்டும். அல்லது அது சாத்தியமில்லாத பட்சத்தில் இறக்குமதிக்கான வரி, சுங்க வரி, கலால் வரி என்று என்னென்னவோ வரிகளை பொட்ரோலியப் பொருட்களின் மீது பூசி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதையாவது குறைக்க வேண்டும். ஆனால், இங்கு அப்படித்தான் நடக்கிறதா?

இந்த அரசை நினைத்தால் வெள்ளைக்கார துரைதான் ஞாபகத்துக்கு வருகிறான். அவனாவது அந்நியமக்களை அடிமைப்படுத்தி, வரி வசூல் செய்து, தன்னுடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய பொருளாதார மேதாவியான மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சொந்த நாட்டு மக்களிடமே வரி வசூலித்து ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம். உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது இந்தியா என்ன ஐரோப்பிய நாடுகள் மாதிரி தத்தளிக்கவா செய்தது? பொருளாதாரத்தில் பாதுகாப்புடன் இந்தியா போன்று வேறு எந்த நாடு இருக்கிறது..? அந்நாடுகளில், ஷேர் மார்க்கெட் சரிந்தால் நாட்டின் பொருளாதாரமும் சரிந்துவிடுகிறது. இந்தியாவில் அப்படியா நடக்கிறது... என்றெல்லாம் வாய்க்கிழிய பேசும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இப்போது மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் காத்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்லப் போகிறார்..?பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் எல்லாப் பொருட்களின் விலையும் உயரும் என்பது பொருளாதார மேதாவிகளான மன்மோகனுக்கும் பிரணாப்புக்கும் தெரியாதா?

அதுமட்டுமல்ல, பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களின் வசம் ஒப்படைக்க வேண்டாம்... வேண்டாம் என்று கம்யூனிஸ்ட்டுகள் கரடியாகக் கத்தினார்களே, அதையாவது காதில் போட்டுக்கொண்டதா இந்த காங்கிரஸ் அரசு..?

விளைவு... கடந்த ஆண்டிலிருந்து 8 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, பணவீக்கம் ஏற்பட்டது. அதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை கடகடவென்று உயர்ந்து சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தவியாய் தவித்தனர்.

விலைவாசி உயர்கிறபோதெல்லாம் நடுத்தர மக்களின் வருமானம் உயர்வதில்லை; உயர்த்தப்படுவதும் இல்லை. அதனால், பட்ஜெட்டில் துண்டு விழுந்து ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் கடனை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி தவிக்கிறார்கள். சிலர், கடன் முதலைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் ஓட்டுகளைப் பொறுக்கி ஆட்சியைப் பிடிக்கும் அரசு, முதலாளிகளுக்கு சாதகமாகவே எல்லா நேரத்திலும் முடிவெடுக்கிறது. காரணம். அவர்கள்தானே சரியாக வரி ஏய்ப்பு செய்கிறார்கள். முதலாளிகள் ஒருபக்கம் வரி ஏய்ப்பு செய்து நாட்டை ஏமாற்றினால், சாதாரண மக்கள் மீது வரி திணிப்பு செய்கிறது அரசு. அப்போதுதானே முதலாளிகள் கட்டாமல் போன வரிப்பணத்தை ஈடுசெய்யமுடியும். ஆக, எல்லா நேரத்திலும் ஏழை, நடுத்தர மக்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பு எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் இருந்தது. காய்கறிகள் கிலோ 100 ரூபாய் வரை விற்றது. அப்போது விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்று பிரணாப் அறிவித்தார். அதேபோல் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே எல்லா காய்கறிகளின் விலையும் மளமளவென்று குறைந்தது. தேர்தலுக்கு முன்பு வரை காய்கறிகள் உற்பத்தி குறைவாக இருந்தது. அது எப்படி ஒரு வாரத்துக்கு முன்பு உற்பத்தி அதிகரித்தது என்ற சூட்சமம் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 13க்குப் பிறகும் அப்படியொரு சூழ்நிலை ஏற்படலாம்.

1 comments:

vaazhga valamudan pls wait this government will change very soon. Kumaraselvan

Post a Comment

கோப்பு

கோப்பு