13 April 2011

பத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு!

Posted by Gunalan Lavanyan 6:54 AM, under | No comments

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.வி.சேகர் தன்னுடைய சொத்துக்கணக்கை தாமாகவே சென்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளித்தார். கடந்த 5 ஆண்டுகளில் மனைவி மற்றும் தன்னுடைய வருமானம் பற்றிய வருமானக் கணக்கை தேர்தல் ஆணையரிடம் அளித்தார். அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கிய இந்தச் செயல் பற்றி எஸ்.வி. சேகரிடமே கேட்டோம்.

எதற்காக திடீரென்று தேர்தல் ஆணையரை சந்தித்து சொத்துக்கணக்கு கொடுத்தீர்கள்..?

தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும் இப்படித்தான் கேட்டார். ‘நீங்கள்தான் போட்டியிடவில்லையே, எதற்காக என்னிடம் கொடுக்கிறீர்கள்’ என்று கேட்டார்? எம்எல்ஏ ஆகும்போது சொத்துக்கணக்கை தாக்கல் செய்த மாதிரிதான் இப்பவும் கொடுத்து இருக்கிறேன். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அதனால், கடந்த 5 ஆண்டுகளில் என்னுடைய வருமானம், என் மனைவியுடைய வருமானம் மற்றும் எங்கள் சொத்து மதிப்புகளைப் பற்றிய எல்லா ஆவணங்களையும் பிரவீன்குமாரிடம் கொடுத்தேன். தேர்தலில் நிற்கவில்லை என்பதற்காக கடந்த 5 ஆண்டுகள் 100 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டு ஓடிவிடலாமா? எல்லோருமே இப்படி தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், யாரும் செய்வது இல்லை. செய்யவேண்டும் என்று விதியும் இல்லை. ஆனால், நான் செய்திருக்கிறேன். நான் எம்.எல்.ஏவாக இருக்கும்போது பதவியைப் பயன்படுத்தி எதையும் சம்பாதிக்கவில்லை என்பதை சொல்வதற்காகத்தான் அப்படிச் செய்தேன். எல்லாருக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்.

சொத்துக்கணக்கு தாக்கல் செய்தபோது...


காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு கொடுத்து இருந்தீர்களே என்ன ஆனது?

ஆமாம் கொடுத்தேன். ஆனால், அது நடக்கக் கூடாது என்று எப்படியோ தடுத்துவிட்டார்கள். ஆனால், நான் யாரையும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை. தார்மீக அடிப்படையில் கேட்டேன்; கொடுக்கவில்லை. ஆனால், எனக்கு காங்கேயத்தில் ஒதுக்கியிருப்பதாக தகவல் வந்தது. அது நடக்கும் என்று இருந்தேன். ஆனால், வேட்பாளரை அறிவிப்பதற்கே இழுபறி நீடித்து வந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத தங்கபாலு போட்டியிடுகிறார். தங்கபாலு யார் என்றுகூட மக்களுக்குத் தெரியாது. மெகா டிவி வெச்சிருக்காங்களே அந்த அம்மாவோட புருஷனா... வேட்புமனு நிராகரிச்சாங்களே அந்த அம்மாவோட புருஷனா... என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். இதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; காங்கிரஸுக்குத்தான் நஷ்டம். 10 சீமான் செய்ய வேண்டிய வேலையை தங்கபாலுவே செய்துவிட்டார்.

விருப்பமனு தாக்கல் செய்தபோது...
தலைவரே மாற்று வேட்பாளர் என்பது கேலிக்குரியதாகிவிட்டதே?

ஒரு கட்சித் தலைவர் டம்மி புருஷனாக இருக்கலாம்; ஆனால், டம்மி வேட்பாளராக இருக்கக் கூடாது. ஆனால், தங்கபாலு டம்மி வேட்பாளராக இருக்கிறார் என்றால் என்ன சொல்வது. (சிரிக்கிறார்)

எதற்காக வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்து வந்தது?

எல்லாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு யாரை அறிவிப்பது, யாரை தவிர்ப்பது என்று தெரியாமல் குதிரை பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அதுதான் காரணம். இதுபற்றி ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறேன்.

என்ன பேசினீர்கள்?

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே எல்லாத் தொகுதிகளிலும் தகுதியுடையவர்களை பட்டியலிட்டு வைத்துக்கொண்டு, கூட்டணி பிரச்னை, இட ஒதுக்கீட்டுப் பிரச்னை எல்லாம் தீர்ந்தபிறகு ஏற்கெனவே முடிவுசெய்து வைத்திருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தேன். அப்படி செய்திருந்தால், இந்த இழுபறிக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், அதை கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் தடுத்துவிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல், டெல்லியில் உள்ள தலைவர்களின் மனநிலையே வேறு. தமிழ்நாட்டில் தலைமையில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர்கள் கேட்பார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்தே தூக்கினாலும் தூக்கிவிடுவார்கள்!

தங்கபாலு வேண்டுமென்றே சதி செய்துதான் தன் மனைவியை வேட்பாளராக அறிவித்து, இப்போது தானே போட்டியிடுகிறார் என்று கூறுகிறீர்களா..?

அவர் சதி செய்தார் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு கட்சித் தலைவர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் தங்கபாலு. இவருடைய நடவடிக்கையால் கட்சிக்குத்தான் மரியாதைக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

தங்கபாலு நடவடிக்கையால் மயிலாப்பூரில் காங்கிரஸ் ஜெயிக்காது என்று சொல்கிறீர்களா..?

நான் அப்படி சொல்லவில்லை. வெறும் பிராமணர்கள் மட்டும் இருக்கிற தொகுதி இல்லை மயிலாப்பூர். இங்கே குடிசைவாழ் மக்கள் இருக்கிறார்கள்; மீனவ மக்கள் இருக்கிறார்கள்; படித்தவர்கள் - படிக்காதவர்கள் என்று எல்லாதரப்பு மக்களும் வசிக்கிறார்கள். தங்கபாலு இப்படி நடந்துகொண்டதால், காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே போய்விட்டது. அதுவும் இல்லாமல் குரங்கு கையில் கிடைத்த அப்பம் மாதிரிதான் மயிலாப்பூர் நிலைமை இருக்கிறது. பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது வழக்கறிஞர், ஆடிட்டர் எல்லாரையும் வைத்து மனுவை பரிசீலனை செய்துதான் பூர்த்தி செய்து கொடுப்பார்கள். அப்படி எதுவுமே செய்யாமல் தங்கபாலு இப்படி செய்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு தலைவருக்கு வேண்டிய எந்தத் தகுதியும் அவரிடம் இல்லை. யார் கையில் கிடைக்கக் கூடாதோ, அங்கே மயிலாப்பூர் தொகுதி போயிருக்கிறது.
பொதுவாக இந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்கிறீர்களா?

திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும். தேர்தலில் நிற்பவர்கள் வெற்றி பெறுவதற்காகத்தானே போட்டியிடுகிறார்கள். தோற்பதற்காக யாரும் போட்டியிடமாட்டார்கள். அதனால், இந்தக் கூட்டணி தோற்கும் என்று நான் எப்படி சொல்வேன். எப்பவும் நெகடிவாக யோசிக்கக் கூடாது. ஆனால், மக்கள் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது. எதுவேண்டுமானாலும் நடக்கலாம்!
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து என்ன பேசினீர்கள்?
மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றேன். அவர்கூட சொன்னார், ‘என்னாய்யா உனக்குத்தான் கிடைக்கும்னு நினைச்சேன். இப்படி ஆகிவிட்டதே...’ என்றார். நான் என்ன சொல்வது.

கருணாநிதியை சந்தித்தபோது...

அதிமுகவில் இருந்திருந்தால் சீட் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாகக் கிடைத்திருக்கும். ஆனால், அதை வேண்டாம் என்று நான் மறுத்திருப்பேன். காங்கிரஸில் எனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என்றால் என்ன? எம்பி.யாக வேண்டும் என்று என் ஜாதகத்தில் எழுதியிருக்கும். அதனால், நான் எம்.பியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எப்பவும் உயர்வாக சிந்திக்க வேண்டும். எம்.எல்.ஏ பதவி போயிடுச்சேன்னு அழக்கூடாது. பதவிக்காக ஆசைப்படுற ஆள் நான் கிடையாது. அப்படி இருந்திருந்தால், திமுகவில் போய் சேர்ந்திருப்பேனே!

பலே பாசிட்டிவ் யோசனைதான்

பேட்டி: சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு