26 April 2011

கண்ணீர் வடித்த பக்தர்

Posted by Gunalan Lavanyan 7:36 AM, under | No comments


தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.

நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம் என்று சொல்லுங்கள் மாடி வீடு கட்டித்தரச் சொல்கிறேன்’ என்றார். அதற்கு ஜீவா சொன்னார், ‘அப்படியா, சந்தோஷம். அதேபோல இங்கு இருக்கிற எல்லா ஏழைக் குடிசைகளையும் மாடி வீடாக மாற்றித் தருவீர்கள் என்றால், என்னுடைய வீட்டையும் மாடியாக்கிவிடுங்கள்’ என்று ஜீவா காமராஜருக்கு பதில் அளித்ததாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

பாருங்கள் ஒப்பற்றத் தலைவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் பெயர் போன தலைவர், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய தலைவர், எல்லா தரப்பு மக்களின் அபிமானத்தையும் பெற்ற தலைவர் காமராஜரே ஜீவாவின் வறுமையைப் பார்த்து வறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், ஜீவா எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும்? எல்லா ஏழைகளும் எப்போது மாடியில் வசிக்கிறார்களோ, அப்போது தானும் வசிக்கிறேன் என்று கூறிய ஜீவா எவ்வளவு பெரிய தியாகி?

விஷயத்துக்கு வருகிறேன். விகடனில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜீவாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதினேன் (வெளியீடு விகடன் பிரசுரம்). ஜீவா என்ற பெயரிலேயே அது வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது.

ஆனால், அதுவிஷயமல்ல. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீவா புத்தகத்தை வாசித்துவிட்டு, என்னோட தொலைபேசியவர்கள் பலர். அதில் சிலர் வாழ்த்து சொன்னார்கள், சிலர் இதுமாதிரி நிறைய புத்தகங்கள் வரவேண்டும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்கள். ஆனால், ஈரோட்டிலிருந்து பேசிய வாசகர் புத்தகத்தைப் படித்துவிட்டு, நெஞ்சுறுகி அழுதுவிட்டார். அவருக்கு வயது 50.

அவர் பேசியதை அப்படியே பதிவு செய்கிறேன்.

‘என் வயசுக்கு காமராஜர் தொடங்கி, இன்று இருக்கிற போலி அரசியல் தலைவர்கள் வரை பல பேரை பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா மாதிரி ஒரு தலைவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது துரதிர்ஷ்டக்காரனாக என்னை நினைக்கிறேன். அவரோடு அரசியல் செய்தவர்கள் அவரை மறைத்துவிட்டார்கள். இன்றைய தலைமுறையில் யாருக்கு ஜீவாவை தெரியும். 

போலி அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசச்சொல்லி சிலரை அதற்கு நியமித்தும் விடுகிறார்கள். ஆனால், இலவசமாக வருகிற மாடி வீட்டைக்கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் படைத்த தலைவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? அன்று ஜீவா இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும், துன்பங்களையும் படிக்கும்போது மனம் வலிக்கிறது. (அழுகிறார்...) ஜீவாவைப் பற்றி இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மற்ற புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொன்ன ரமேஷ், ஈரோடு மில் ஒன்றில் துணி மூடைகள் சுமக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரமேஷின் பக்தியைப் பார்த்து திகைத்துவிட்டேன்.

ஜீவா மறைந்து 50 ஆண்டுகள் நெருங்க இருக்கிற இந்த வேளையிலும், பல ஜீவன்களின் இதயத்தில் இன்னமும் ஜீவித்து வருகிறார் ஜீவா.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு