26 April 2011

கண்ணீர் வடித்த பக்தர்

Posted by Gunalan Lavanyan 7:36 AM, under | No comments


தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.

நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம் என்று சொல்லுங்கள் மாடி வீடு கட்டித்தரச் சொல்கிறேன்’ என்றார். அதற்கு ஜீவா சொன்னார், ‘அப்படியா, சந்தோஷம். அதேபோல இங்கு இருக்கிற எல்லா ஏழைக் குடிசைகளையும் மாடி வீடாக மாற்றித் தருவீர்கள் என்றால், என்னுடைய வீட்டையும் மாடியாக்கிவிடுங்கள்’ என்று ஜீவா காமராஜருக்கு பதில் அளித்ததாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

பாருங்கள் ஒப்பற்றத் தலைவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் பெயர் போன தலைவர், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய தலைவர், எல்லா தரப்பு மக்களின் அபிமானத்தையும் பெற்ற தலைவர் காமராஜரே ஜீவாவின் வறுமையைப் பார்த்து வறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், ஜீவா எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும்? எல்லா ஏழைகளும் எப்போது மாடியில் வசிக்கிறார்களோ, அப்போது தானும் வசிக்கிறேன் என்று கூறிய ஜீவா எவ்வளவு பெரிய தியாகி?

விஷயத்துக்கு வருகிறேன். விகடனில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜீவாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதினேன் (வெளியீடு விகடன் பிரசுரம்). ஜீவா என்ற பெயரிலேயே அது வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது.

ஆனால், அதுவிஷயமல்ல. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீவா புத்தகத்தை வாசித்துவிட்டு, என்னோட தொலைபேசியவர்கள் பலர். அதில் சிலர் வாழ்த்து சொன்னார்கள், சிலர் இதுமாதிரி நிறைய புத்தகங்கள் வரவேண்டும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்கள். ஆனால், ஈரோட்டிலிருந்து பேசிய வாசகர் புத்தகத்தைப் படித்துவிட்டு, நெஞ்சுறுகி அழுதுவிட்டார். அவருக்கு வயது 50.

அவர் பேசியதை அப்படியே பதிவு செய்கிறேன்.

‘என் வயசுக்கு காமராஜர் தொடங்கி, இன்று இருக்கிற போலி அரசியல் தலைவர்கள் வரை பல பேரை பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா மாதிரி ஒரு தலைவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது துரதிர்ஷ்டக்காரனாக என்னை நினைக்கிறேன். அவரோடு அரசியல் செய்தவர்கள் அவரை மறைத்துவிட்டார்கள். இன்றைய தலைமுறையில் யாருக்கு ஜீவாவை தெரியும். 

போலி அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசச்சொல்லி சிலரை அதற்கு நியமித்தும் விடுகிறார்கள். ஆனால், இலவசமாக வருகிற மாடி வீட்டைக்கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் படைத்த தலைவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? அன்று ஜீவா இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும், துன்பங்களையும் படிக்கும்போது மனம் வலிக்கிறது. (அழுகிறார்...) ஜீவாவைப் பற்றி இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மற்ற புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொன்ன ரமேஷ், ஈரோடு மில் ஒன்றில் துணி மூடைகள் சுமக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரமேஷின் பக்தியைப் பார்த்து திகைத்துவிட்டேன்.

ஜீவா மறைந்து 50 ஆண்டுகள் நெருங்க இருக்கிற இந்த வேளையிலும், பல ஜீவன்களின் இதயத்தில் இன்னமும் ஜீவித்து வருகிறார் ஜீவா.

25 April 2011

கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி!

Posted by Gunalan Lavanyan 10:09 AM, under | 3 comments


தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின் ஸ்லோகனையே தலைப்பாக்கி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தை அப்படியே அளிக்கிறேன்.... அதன்பிறகு பேசுவோம்.



25.04.2011

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்தியா கோப்பை வென்றதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்; ஆந்திர முதல்வரும், முன்னாள் விளையாட்டு வீரருமான கிரண்குமார் ரெட்டியும் பார்த்துக்கொண்டு இருந்தார். மறுநாள், கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்துக்கொண்டு இருக்க, ஆந்திர முதல்வரோ அமைதியாக இருந்தார்.

’நீங்க எதுவும் செய்யவில்லையா?' என்று நிருபர்கள் கேட்டபோது, ’கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் போல அல்ல; அவர்களுக்கு நிறையவே கிடைக்கிறது. ஆகவே, தேவையின்றி அரசு நிதியை எதற்கு வீணாக்க வேண்டும்?' என்று, சிம்பிளாக சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழக முதல்வரான தாங்களோ, ’மகா ஏழைகளான' கிரிக்கெட் வீரர்களுக்கு, உங்கள் பங்குக்கு, மன்னிக்கவும்... தமிழக மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்று, அணிக்கு மூன்று கோடி ரூபாயும், பெரும்பாலும், சக வீரர்களுக்கு, குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு, ஒரு கோடி ரூபாயும் அறிவித் தீர்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால், அப்போது தேர்தல் நேரம், எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாத நிலை இருந்தது. ஆனாலும், ’கஷ்டத்தில்' இருக்கும் வீரர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்று உங்களது, ’கருணை' உள்ளம் சொல்ல, முனைப்புடன் தேர்தல் கமிஷனுக்கு, பிரசாரத்துக்கு நடுவிலும் கடிதம் எழுதி, அனுமதி வாங்கினீர்கள்.

அவர்களும் அனுமதி கொடுத்து, ’பணம் கொடுக்கலாம்; ஆனால், அதை போட்டோ எடுத்து, பப்ளிசிட்டி தேடக்கூடாது' என்று, ஒரு நிபந்தனை விதித்தனர். ’ஒரு போட்டோகூட எடுத்துக்கக்கூடாதாம்' என்று, இதையும் வேதனையுடன் தாங்கள், நிருபர்களிடம் மனம் நொந்து கொண்டீர்கள்.

இந்த அளவு ஏழை, எளிய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடுபடும் தங்கள் பொன்னான உள்ளத்துக்கு ஒரு வேண்டுகோள்... இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு கூட கடிதம் எழுத வேண்டாம்; ஒரு வாய்மொழி உத்தரவு போதும்... செய் வீர்களா?

’தமிழர்களே... தமிழர்களே' என்று, தாங்கள் வாஞ்சையாய் அழைக்கும் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் சிலர், விடாப்பிடியாக தமிழ் வழிக்கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் எல்லாம், சென்னையில் மட்டுமே கிடைக்கின்றன. சென்னை என்பது, தமிழகத்தின் ஒரு பகுதி தானே தவிர, சென்னையே தமிழகம் அல்ல. ஆனால், கல்வி அதிகாரிகள், ’உனக்கு வேண்டுமானால், சென்னைக்கு வந்து வாங்கிக்கொள்' என்பதுபோல, விட்டேத்தியாக உள்ளனர்.

பொறுமை இழந்த ஈரோடு மக்கள், உரிமை பாதுகாப்பு தலைவர் சண்முகசுந்தரம் என்பவர், இந்த வருடமாவது இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, கோர்ட்டிற்கு போய்விட்டார். கோர்ட்டாரும், ’என்ன இது... படிக்கிற புள்ளைகளுக்கு, இருக்கிற இடத்துல புத்தகம் கிடைக்க ஏற்பாடு பண்ணாம...' என்று எரிச்சலுடன் விளக்கம் கேட்டுள்ளனர்.

சாதாரண விஷயம்... ’அந்தந்த ஊரில் உள்ள தனியார் புத்தகக்கடையில், அரசு நிர்ணயித்த விலைக்கு புத்தகம் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று, தாங்கள் ஒரு வார்த்தை, சின்னதாய் ஒரு வாய்மொழி உத்தரவு போட்டால் போதும்... தமிழ் குழந்தைகள் படிச்சு பொழச்சுக்குவாங்கய்யா.

நன்றி,

இப்படிக்கு
ஆனந்தி

(நன்றி: தினமலர்)



- இப்படி ஒரு கடிதம் தினமலரில் வெளியானதுமே சற்று நொந்துத்தான் போனான். தமிழ் வழிக் கல்வி பயில்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிறப்புச் சலுகை என்றெல்லாம் அறிவிப்புகளை ’அள்ளி இறைக்கும்’ (நன்றி: நகைச்சுவை நடிகர் வடிவேலு) திமுக அரசு, மாணவர்களுக்கு எளிதாகப் புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைத்தால் கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது.

வாசலில் தமிழை வரவேற்றுவிட்டு புழக்கடைப்பக்கம் துரத்தி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது இந்த பாராமுகம். புத்தகங்கள் கிடைக்கவே வழி செய்யமுடியாத ஒரு அரசு, படித்துவிட்டு பட்டம் வாங்கிய பிறகு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு மட்டும் எப்படி முன்வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாகவே ப்ளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை அறிவித்து விட்டார் என்று அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்து இருக்கிறார். புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கிற பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு இப்படி அவர் கவலைப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், 58 வயது வரைக்கும் பதவியில் இருக்கப்போகிற ஒரு சாதாரண அதிகாரி தன் அதிகாரத்தை மீறி, தன்னை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக எப்படி அறிவிக்கலாம் என்று மட்டும் கவலையோடு பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்.

ஆக, அரசியல்வாதிகளின் மனநிலை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. மக்கள் நலப்பணிகள் நடக்காமல் போனால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அதிகாரம் பறிபோனால் மட்டும் கூக்குரல் எழுப்பு வார்கள். இந்த நிலை தமிழ் வழிக் கல்வியில் மட்டுமல்ல. தமிழர் பாதுகாப் பிலும் கூடத்தான்.

24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments


புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.



பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாளும் அனந்தபூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

புட்டபர்த்தி சாய்பாபா மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய - மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் மரணச் செய்தியை கேட்டுவிட்டு கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் பாபா. இதன்மூலம் தமிழக மக்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். ‌ஜெயலலிதா வெயிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சாய் பாபாவின் இழப்பு மனித குலத்துக்கு பேரிழப்பு’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’தெய்வீகத் தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர்’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபா மறைவால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது. சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி

தமிழ்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு


















பாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்!

Posted by Gunalan Lavanyan 3:48 PM, under | 2 comments

உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார்.

இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள்.



ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பாபா இருந்த புட்டபர்த்தியில் கடந்த ஒரு வார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குக் காரணமே அவருடைய மரணத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அவருடைய பக்தர்கள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அவர் இறந்தபிறகுதான் 144 தடை உத்தரவே பிறப்பக்கப் பட்டது என்றும், ஆனால், உடனே விஷயம் வெளியில் தெரிந்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகிவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு வாரம் காலதாமதமாக மரணச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் புட்டபர்த்தியின் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை மருத்துவ மனைக்கு சென்று பாபா உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஆனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவலும் உண்மையில்லை என்று ஒருசாரார் பேசிக் கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் பாபா டிரஸ்டுக்குச் சொந்தமான சொத்தை யார் நிர்வகிப்பது என்ற தகராறின் காரணமாகத்தான் மரணச் செய்தியை மருத்துவர்களே அறிவிக்காமல் ஒத்திவைத்து இருந்தார்களோ என்ற சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எது எப்படியிருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாபாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும்.

19 April 2011

180 டிகிரி

Posted by Gunalan Lavanyan 8:28 PM, under | No comments

180 டிகிரி படத்திலிருந்து சில காட்சிகள்...


















18 April 2011

நயன்தாரா மாதிரி!

Posted by Gunalan Lavanyan 12:02 AM, under | No comments


திரைப்பட பாடலாசிரியர் பா விஜயின் ஸ்டைலில் அடுத்து கதாநாயகனாக அறிமுகமாகும் சினிமா கவிஞர் சினேகன். ஏற்கெனவே அமீர் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து, டான்ஸ், காமெடி என கலக்கிய சினேகன் இப்போது உயர்திரு 420ஆக அவதாரம் எடுத்து நிற்கிறார். நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பி என்று சொல்லப்படும் கர்நாடகப் பைங்கிளி மேக்னா ராஜ்தான் படத்தின் கதாநாயகி.


இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரேம்நாத் உயர்திரு 420இன் இயக்குனராக பரிணமித்து இருக்கிறார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக உயர்திரு 420 உருவாகி வருவதாகக் கூறுகிறார்கள்.

படத்தின் சில காட்சிகள்...








14 April 2011

ராதாவின் எதிர்பார்ப்பு

Posted by Gunalan Lavanyan 8:06 AM, under | No comments

நீண்ட நாட்களாக திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இன்னு வராமலேயே இருக்கும் படம் கோ. ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

காதலர் தினத்தில் வெளிவருவதாகப் பேசப்பட்ட ’கோ’ உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளிவரலாம் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்வதுமாதிரி படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 14 அன்று படம் திரைக்கு வரும் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால், ஏப்ரல் 14 அன்றும் வெளிவருகிறமாதிரி எந்த அறிகுறியும் இல்லை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’ படங்களுக்குப் பிறகு கோ படத்தை வெளியிட்டு வெற்றிப்படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார் உதயநிதி, ஆனால், பின்னணி இசை அமைப்பதில் ஹாரிஸ் ஜெயராஜ் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணி எந்தநிலையில் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. 

அதனால், ராதாவும் அவர் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோ படம் எப்போது வெளியாகும் என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

கோ படத்தின் சில காட்சிகள்...















கோப்பு

கோப்பு