17 January 2010

இனி நிம்மதியா சிரிங்க!

Posted by Gunalan Lavanyan 12:26 AM, under | 2 comments

ரமேஷ் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவருக்குத் திருமணம் நிச்சயமானது. கல்யாணத்துக்கு ஒருமாதம் இருக்கும்போது மணமகளுக்குப் பிறந்தநாள் வர, ஊரிலிருக்கும் தமது வருங்கால மனைவியைப் பார்த்துப் பரிசு கொடுத்துவர, பைக்கில் புறப்பட்டார் ரமேஷ்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மகிழ்ச்சியுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பயணிக்க, ஒரு வளைவில் லாரியொன்று எதிர்பாராமல் முளைத்துத் திரும்ப, ரமேஷ் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் சிற்சில காயங்களுடன் உயிர்தப்ப, அவரின் தாடை எலும்பு நொறுங்கி, முகம் வீங்கிவிட்டது. வாய் திறக்க முடியவில்லை. முகம் கோரமாகிவிட்டது. 'ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படியாகிவிட்டதே... மகனது வாழ்க்கை அவ்வளவுதானா?' என்று கண்கலங்கிவிட்டனர் ரமேஷின் பெற்றோர்.
ஆனால், ''மருத்துவம் இன்றைக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளதால் ரமேஷின் பெற்றோர் கண் கலங்க வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் சென்னை நந்தனத்தைச் சேர்ந்த முகச் சீரமைப்பு மருத்துவர் செந்தில் முருகன்.
'ரமேஷின் பிரச்னையை எப்படி சரிப்படுத்தலாம்' என்று அவரிடம் கேட்டால், மளமளவென்று வருகிறது பதில்.


''இதுபோன்று விபத்தில் அடிபட்டு முகம் காயமடையும்போது தாடை நொறுங்கியிருக்கும். வாய் திறக்க முடியாது; சாப்பிட முடியாது. மிகுந்த அவஸ்தையாக இருக்கும். இதற்கு முன்பெல்லாம் கம்பி கட்டி சிகிச்சையளித்து வந்தோம். பற்களுக்கு இடையே கம்பி விட்டு, மேல் தாடை, கீழ்த் தாடையை சேர்த்து வைத்துக் கட்டுவோம். இப்படிச் செய்வதால் நான்கைந்து வாரங்களுக்கு வாயைத் திறக்க முடியாது; உணவருந்த முடியாது.
ஆனால், ப்ளேட்டிங் என்றொரு நவீன முறை இருக்கிறது. டைட்டானியம் என்றொரு மினி பிளேட் கொண்டு உடைந்த எலும்புப் பகுதியைச் சேர்த்துவைத்து ஸ்க்ரூ செய்துவிடுவோம். இந்த சிகிச்சையில் எப்போதும் போல் வாய் திறக்கலாம்; மிக எளிதாகவும் குணம் பெறலாம். என்றாலும், இதிலும் ஒரு சின்னப் பிரச்னை உண்டு. இந்த சிகிச்சையில் பொருத்தப்படும் டைட்டானியம், மெட்டல் ஆதலால், இரண்டிலிருந்து நான்கு வருடங்களுக்குள் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து அதனை எடுக்க நேரிடலாம்.
இப்போது இன்னும் அட்வான்ஸாக ரிசார்பிள் பிளேட்ஸ் (Rechargeable plates) வந்துவிட்டன. இவற்றை வாயிலிருந்து எடுக்கத் தேவையில்லை. நம் உடம்பில் உள்ள fluids மூலமாகத் தானாகவே இவை கரையும் தன்மை வாய்ந்தவை"" என்ற மருத்துவரிடம்,
'முகச்சீரமைப்பு வேறு எதுயெதெற்கெல்லாம் செய்யப்படுகிறது' என்றோம்.
"குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடான உதட்டுப் பிளவு, அண்ணப் பிளவு போன்றவற்றுக்கு முகச் சீரமைப்பு சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. கருவுற்ற காலத்தில் தாய்க்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொடுப்பது போன்ற காரணங்களால்தான் இந்த அண்ணப் பிளவு, உதடுப் பிளவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால், குழந்தை தாய்ப்பால் குடிக்க முடியாது. பேச்சு சரியாக வராது. முகம் விகாரமாக இருக்கும். இதற்கான சிகிச்சையாக ஐந்தாறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். முதலில், உதடுப் பிளவுக்கு சிகிச்சை பிறகு அண்ணப் பிளவு. அப்புறம் இடுப்பெலும்பை எடுத்துப் பொருத்தும் ஒட்டறுவை சிகிச்சை என்று அறுவை பல நிலைகளில் நிகழ்த்தப்படும்.
ரிசல்ட் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கவனமுடன் செய்யப்படும் இந்த சிகிச்சைகளால் குழந்தைக்கு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாக மீட்டுத்தர முடியும்" என்ற மருத்துவர் செந்தில் முருகன், "முகச்சீரமைப்பு இன்றைக்குப் பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று பொடி வைத்துப் பேசினார்.
'எப்படி' என்றோம். சொல்லத் தொடங்கினார்.
"பெண்களுக்குத் திருமண வாழ்வு இன்றியமையாதது. இதில் முகம் பெரும் பங்கு வகிக்கிறது. பற்கள் சற்று எடுப்பாக இருந்தாலே சுயநல ஆண்களால் பெண்கள் நிராகரிக்கப்படும் நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. எடுப்பாக இருத்தல், தாடை சிறியதாக அல்லது பெரிதாக உள்ளது. முகம் கோணலாகக் காணப்படுவது என்று எந்தவொரு குறைபாட்டையும் சரி செய்து. பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை முகச்சீரமைப்பு நிபுணர்கள் கொண்டுவருகிறார்கள்.
களிப்பில் ஆரம்பிக்கும் சிகிச்சை, அறுவை வரை உள்ளது. யாருக்கு எது தேவையோ அதைச் செய்கிறோம். செலவும் மிகமிகக் குறைவுதான்" என்ற மருத்துவர், "இப்போது புதிதாக நோயாளிகளிடம் ஒரு பிரச்னையை நாங்கள் சந்திக்கிறோம். மேல் தாடை சிறியதாகவும் கீழ்த் தாடை பெரியதாகவும் இருக்கும்போது ஒருவருக்கு முகம் Dish face மாதிரி இருக்கும். இதற்கு Micrognathia என்று பெயர். இக்குறைபாட்டுக்கு எலும்பு விரிவாக்க சிகிச்சை மிகச் சிறந்தது. Distractor என்னும் கருவி கொண்டு தாடை எலும்பைத் தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்து இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. முன்பெல்லாம் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து சிகிச்சை செய்யப்படும். இப்போது இந்த Distraction Osteogenesis என்கிற புதிய முறை வந்துவிட்டதால் எல்லாமே எளிதாகிவிட்டது. நோயாளிகள் இனி நிம்மதியாகச் சிரிக்கலாம்" என்றார்.

-சா.இலாகுபாரதி
2006, 9 ஜூலை கல்கி இதழில் வந்த கட்டுரை.

2 comments:

நல்ல விவரங்கள் அடங்கிய பதிவு.

பாராட்டுகள்.

கூடவே ஒரு வேண்டுகோள்.

சொல் சரிபார்ப்பு இருந்தால் பின்னூட்டவருபவர்களுக்கு இடைஞ்சல்.

நீங்க மாடு விரட்டல் வச்சுருக்கீங்கதானே?

அதாங்க மாடரேஷன். இது வச்சால் அது வேணாம்.

doctor address or phone number kidaikuma?

Post a Comment

கோப்பு

கோப்பு