19 January 2010

காதலிக்காதவர்கள் படிக்கவேண்டாம்!

Posted by Gunalan Lavanyan 11:33 PM, under | No comments

அன்பிற்கினியவளே,

இப்போதும் நான் உன் கூந்தலைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதுயெப்படி நான் பார்க்கிற ஒவ்வொரு முறையும் உன் பார்வையைப் போலவே, உன் ஸ்பரிஸத்தைப் போலவே, உன் சிரிப்பைப் போலவே உன் கூந்தலும் புதுப் பொலிவோடும் புது அழகோடும் எனக்குக் காட்சித் தருகிறது; தெரியவில்லை.

நக்கீரர் காலத்திலிருந்தே கேட்டுவருகிறார்கள், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால் கூந்தலுக்கு மணம் வருகிறதா..? அல்லது இயற்கையிலேயே கூந்தலிலிருந்து வாசனை வழிகிறதா?’ என்று.

இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீ பிறப்பாய் என்று தெரிந்திருந்தால், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால்தான் கூந்தலில் மணம் கமழ்கிறது’ என்று நக்கீரர் சொல்லியிருப்பாரா?
உன் கூந்தலிலிருந்து வழியும் வாசனை எப்படி வருகிறது என்பதில் எனக்கும் சந்தேகம்தான். ஆனால், (ஷாம்)பூவால்தான் வருகிறது என்பது மட்டும் இல்லை என்று எனக்கு நிச்சயம் தெரியும்.


அன்றொருநாள் பார்த்தேன், வாசனையற்ற பூக்களைச்  சூடிக்கொண்டு தெருவலம் வந்துகொண்டிருந்தாய். தெருவில் இருப்பவர்களின் பார்வை மொத்தமும் உன் கூந்தலைச் சுற்றிதான் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இந்த மாதிரி ஒரு வாசனையை நான் வாங்கிய எந்த வாசனை திரவியங்களிலிருந்தும் நுகர்ந்தது இல்லை. பார்த்த எந்தப் பூக்களிலிருந்தும் சுகித்தது இல்லை. வாசனையற்ற பூ, கூந்தலிலோ இயற்கையிலேயே மணம் இல்லையாம்! பின் எப்படி மணங்கமழும் கூந்தல்?!

நீ பூக்காரியிடம் பூ வாங்கும்போது பார்த்திருக்கிறேன். உன் கூந்தலின் ஓரம், ஓர் இடம் கிடைக்காதா என்று பூக்களெல்லாம் பிரயாசைப்பட்டு பெருமூச்சு விடுவதை.
அப்படி எத்தனை வயதுதான் ஆகிறது உன் கூந்தலுக்கு..? பதினெட்டு வயதாகிய உன்னைப் போலவே உன் கூந்தலும் இன்னமும் வயதுக்கு வராதது போலவே இருக்கிறதே!

நான் முதன்முதலாய் உன் கூந்தலுக்குதான் அறிமுகம்! மழைநாள் ஒன்றில் குடையின்றி மரங்களடர்ந்த சாலையில் மழையோடு பேசிக்கொண்டு நடந்து வந்தாய். மெல்லிய காற்றில் உன் கூந்தல் மழைச்சாரலோடு கைகுலுக்கி கட்டியணைத்தபோதுதான் தெரிந்துகொண்டேன் உன் தோழிதான் மழை என்பதை.

அப்போதுதான் ரோஜா தோட்டத்திலிருந்து பூ பறித்துவிட்டு நான் வெளியே வந்துகொண்டிருந்தேன்... தோழியோடு இருந்த மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே தோட்டத்தின் வாசலைப் பார்த்தது உன் கூந்தல். நான் நின்றுகொண்டிருந்தேன். என் கையில் கூடை இருந்தது. கூடையில் ரோஜா இருந்தது. இப்போது நான் ரோஜாவைப் பார்த்தேன், உன் கூந்தலையும் பார்த்தேன். கூந்தல் ரோஜாவைப் பார்த்தது, ரோஜா கூந்தலைப் பார்த்தது. மழை சிரித்தது. ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினேன் உன் கூந்தல் பெற்றுக்கொண்டது. நானும் சிரித்தேன். தோழர்களாகிவிட்டோம் நான், மழை, உன் கூந்தல்.

பிறகொரு நாள் நீ கோலப் போட்டியில் மயில் கோலம் வரைந்து கொண்டிருந்தாய். உன் கூந்தல், உன் பின்னங்களில் தூரிகையாகியிருந்தது. உன் கூந்தல்தான் எத்தனை அழகாய் வரைகிறது தெரியுமா? இப்போதெல்லாம் நான் உன் கூந்தலைப் பார்க்கும்போது நிறைய பேசுகிறேன். அதிகமாய் உன்னைப் பற்றிதான். ஒருநாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் என் பேச்சை நிறுத்தி, நீ இவளை காதலிக்கிறாயா என்று என்னிடம் கேட்டுவிட்டது. மௌனமாகவே இருந்தேன். அதுவாகவே தெரிந்துகொண்டது. பிறகுதான் அந்தப் பேருந்துப் பயணத்தின்போது என் சட்டையில் சிக்குவதுமாதிரி சிக்கி உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

அப்போதுதான் உன் முகத்தைப் பார்த்தேன். ஆயிரம் நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் பார்த்ததுபோல அத்தனைப் பிரகாசம் உன் கண்களில். நீ குறுநகை பூத்தாய். நான் சிறுநகை பொழிந்தேன். கூந்தல் சிரித்தது. உன் உதடுகளிலிருந்து வழிந்தது... ‘கொஞ்சம் இருங்களேன்...”
இப்போது நான் அதிகமாகவே இருக்கிறேன் உன் இதயத்தில்.
எப்போது சந்திப்போம்?

மிகுந்த அன்புடன்

சா.இலாகுபாரதி.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு