15 January 2010

‘கவிஞர் அறிவுமதி இயக்கும் படத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான் பாடல்கள்’

Posted by Show Now 1:45 PM, under | 4 comments

தாய்க் கோழியின் கால்கள் போகிற திசையெல்லாம் ஓடித் திரியும் கோழிக்குஞ்சு போல 80-களின் தொடக்கத்திலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமானின் விரல் பிடித்து நடந்தவர் கவிஞர் அறிவுமதி. இருவருக்கும் இடையில் தாய்க்கும் சேய்க்குமான உறவு இருந்தாலும், ஒரு குருவிடம் சிஷ்யன் கொண்டிருக்கிற பயத்தையும் பக்தியையும் ஒன்றாகக் கலந்து கவிக்கோ மீது அளவற்ற மரியாதை வைத்திருந்தார் அறிவுமதி. இந்த இரண்டு கவிமனசுகளையும் இணைக்கும் உணர்வு இழையைப் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சு நெகிழப் பேசுகிறார்கள் இருவரும்.
முதலில் கவிக்கோ தொண்டையை கனைத்தபடி, கண்கள் விரித்துப் பேசத் தொடங்கினார்...

“அது 1982. அதிகமாக நான் கவியரங்கங்கள் நடத்தி வந்த காலம். அந்தச் சமயத்தில்தான் நானும் தொழிற்சங்கத் தலைவர் சு.வெங்கடேசனும் இணைந்து பாரதி விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த விழாவுக்கு கலைஞர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. அந்த விழாவுக்கு சில நாட்களுக்கு முந்தான் அவர் திருச்செந்தூர் நடைபயணம் போய்விட்டு களைப்போடும், கால்களில் கொப்பளத்தோடும் வந்திருந்தார். அதைப் பார்த்தபிறகு அதற்குமேல் அவரை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் கவியரங்கத்துக்கு சிற்பி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் அறிவுமதியோடு இன்னும் சிலர் கவிதை வாசித்தனர். வாசித்தவர்களிலேயே அறிவுமதியின் கவிதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. விழா முடிந்து அறிவுமதியை சந்தித்து, ‘இனி நான் நடத்துகிற எல்லா கவியரங்கங்களிலும் நீ தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறிவிட்டு போய்விட்டேன்.

சில நாட்கள் ஓடின. வாணியம்பாடியில் நான் நடத்தி வந்த ஹைக்கூ கவிதைகளுக்கான ‘ஏதேன்’ இலக்கிய அமைப்பில் கவிதை வாசித்தார். அதில் நான் சில திருத்தங்கள் செய்தேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே தொடர்ந்து நடக்கிற ஹைக்கூ வகுப்பில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அதேபோல நான் நடத்துகிற கவியரங்கங்களிலும் தவறாமல் வந்து கலந்துகொள்வார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்துவிடுவார். சில சமயம் குடும்பத்தோடு வருவார்; வருகிறார் என்றால் சும்மா வரமாட்டார். கவிதை பற்றி ஏதாவது யோசனையோடு வருவார். சந்தேகங்களை அடுக்குவார். ஒவ்வொன்றாய் நான் உடைத்து, எளிதாக தெளிவுபடுத்துவேன். இந்த இடத்தில் ஒன்று சொல்லிவிடுகிறேன்... அதாவது எதைச் சொன்னாலும் கற்பூரத்தைப் போல பிடித்துக்கொள்வார்.

பொதுவாக இரவு நேரத்தில்தான் எல்லோரும் தூங்குவார்கள். ஆனால், அவர் வந்துவிட்டால் விடியவிடிய என்னிடம் கவிதை கேட்பார். நான் ஜப்பானிய ஹைக்கூக்களையும், உருது கஜல்களையும், பாரசீகக் கவிதைகளையும் அந்த நட்ட நடு நிசியில் அவருக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருப்பேன். சில மார்கழி இரவுகளில் கவிதையே எங்களுக்குப் போர்வையாகிவிடும். மதி தொடர்ந்து எழுதுவார். அவர் கவிதைகளில் இருந்த கவித்துவம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் அவர் கவிதைகளின் ரசிகனாகிவிட்டேன்.

ஒருமுறை என்னிடம் இருந்த ஜப்பானிய ஹைக்கூ புத்தகத்தை எல்லாம் எடுத்துக்கொண்டுபோய் என்னோடு படித்த தி.லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன். அப்போது அவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். அவரும் அதை ஆர்வத்தோடு வாங்கி மொழிபெயர்த்துக் கொடுத்தார். அந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை நான் அறிவுமதியிடம் படிக்கச் சொல்லி கொடுத்தேன். அவரும் கவிதைகளைப் படித்தார். அந்தக் கவிதைகளின் ஈடுபாட்டால் ஹைக்கூ கவிதைகள் எழுதி வந்து என்னிடம் காண்பிக்கவும் செய்தார்.

கவிதைகளைப் பார்த்து மகிழ்ந்துபோய், ‘மதி! இன்னும் சில கவிதைகளை எழுது, ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பாக போட்டுவிடலாம். அப்படி அந்த தொகுப்பு வரும்போது அது உனக்குப் பெருமை சேர்க்கும். இதுவரை தமிழில் யாருமே செய்யாத இந்த வேலையை நீ செய். தமிழில் முதன் முறையாக ஹைக்கூ கவிதைகள் எழுதிய பெருமை உன்னைச் சேரட்டும்” என்று சொல்லி அனுப்பினேன். இவரோ ஆர்வத்தில், தான் படித்தது மட்டுமின்றி மற்றவர்களும் பயன் பெறட்டுமே என்ற நல்ல நோக்கில் வேறொரு கவிஞரிடம் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புத்திசாலிக் கவிஞரோ, லாட்ஜில் ரூம் போட்டு அந்தக் கவிதைகளிலிருந்து தான் பெற்ற தாக்கத்தால் ஒரு ஹைக்கூ தொகுப்பையே எழுதிவிட்டார். எழுதியது மட்டுமல்லாமல், ‘தமிழில் முதன் முறையாக ஒரு ஹைக்கூ தொகுப்பு’ என்று அச்சடித்து, அறிவுமதி வெளியிடுவதற்கு முன்கூட்டியே அதை வெளியிட்டுவிட்டார். நாகரிகம் கருதி அந்தக் கவிஞர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஒருமுறை தி.நகரில் அலுவலகம் போட்டு, படம் இயக்கப் போவதாக அறிவுமதி சொன்னார். அதில் நான் பாடல் எழுத வேண்டும் என்றும் கேட்டார். அந்த நேரத்தில் படத்தின் தலைப்பு, இசையமைப்பாளரின் பெயரோடு என் பெயரையும் சேர்த்து போஸ்டரில் அடித்திருந்தார். அதில் பலருக்கு ஆச்சர்யம்! ‘எப்படி அப்துல்ரகுமானை சம்மதிக்க வைத்தாய். இதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ள மாட்டாரே’ என்று ஆச்சர்யப்பட்டவர்கள் கேட்டனர். அவர்கள் சொன்னதைப் போலவே நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஏனோ படமும் நின்றுபோனது.

அறிவுமதி நிறைய இடத்தில் என்னை குருவாக சொல்லுவார். ஆனால், ஒரு இடத்தில் மட்டும் அவர்தான் எனக்கு குரு. ‘ரொம்பவும் நல்லவனாக இருந்தால் வாழ முடியாது’ என்பதை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்” என்று நிறுத்தியவர் சிஷ்யனின் தோளில் கை போட்டு, “தம்பி பேசு” என்று தட்டிக் கொடுத்தார்.

அன்பின் பெருங்கரங்கள் தன்னைத் தழுவியதும் நெகிழ்ந்துபோன அறிவுமதி மெல்லிய குரல் எடுத்துப் பேசத் தொடங்கினார்.
“என்னை அய்யாவிடம் அறிமுகப்படுத்தியது அண்ணன் மீராதான். மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் நான் படித்த கவியரங்கக் கவிதையைக் கேட்டுவிட்டு அங்கிருந்த மீரா அண்ணன் ஏராளமான பார்வையாளர்களையும் கடந்து வந்து என் கைகளைப் பிடித்து குலுக்கினார். பிறகு, அய்யாவுக்குத் தொலைபேசி செய்து, ‘மாநாட்டில் அறிவுமதி என்கிற பையன் சிறப்பாக கவிதை வாசித்தான். நீங்கள் அவனை வாணியம்பாடிக்கு அழைத்து உங்கள் கவியரங்கங்களில் பயன்படுத்தினால், சிறப்பாக வருவான்’ ” என்று உரிமைமையோடு கூறினார். இருவரும் தியாகராயர் கல்லூரியில் வகுப்புத் தோழர்களாக இருந்ததும் அந்த உரிமைக்குக் காரணம்.

இதை மனதில் வைத்திருந்த அய்யா, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பாக நடைபெறும் ‘கவிராத்திரி’க்கு என்னையும் வந்து பங்குபெறுமாறு அன்போடு அழைத்தார். அதில் எனது கவிதைகளையும் கவிதை வாசிப்பு முறையையும் கேட்டுவிட்டு மிகவும் மகிழ்ந்தார்.

அதேபோல, சென்னை புதுக்கல்லூரிக்கு எதிரில் உள்ள பஞ்சாப் நிறுவன பள்ளியொன்றில் ஆண்டுக்கு ஒருமுறை ‘முஷைரா’ என்கிற ‘கவிராத்திரி’ விடியவிடிய நடக்கும். அதற்கு என்னை அழைத்துச் சென்று பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு, இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்த கவிஞர்களின் கவிதைகளை ‘அடடே...’ போட்டு வியந்து ரசித்தபடியே எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் அழகே அழகு. அந்த ரசனைக்காரர் எனக்கு மொழிபெயர்த்துச் சொன்ன ஒரு ரசமான கவிதை இப்பவும் நெஞ்சில் அப்படியே ஒட்டிக்கிடக்கிறது...
‘அவளது கண்களின்
ஆழத்துக்குள்
எட்டிப்
பாருங்கள்...
சமுத்திரத்தின் ஆழத்துக்குள்
ஒரு சமுத்திரம்
கிடைக்கலாம்!’
இப்படி இனிக்க இனிக்க அவர் சொல்லச் சொல்ல, கை வலிக்க வலிக்க நான் எழுதிக்கொண்ட பக்கங்கள் ஏராளம்.

பல சிரமங்களுக்கு இடையில் உதவி இயக்குநராக திரைத்துறையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில், ஒருநாள் எனக்குத் தந்தி வந்தது. அதில் ‘உடனே வாணியம்பாடிக்கு புறப்பட்டு வரவும்’ என்று மட்டும் அய்யா எழுதியிருந்தார். நான் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு ஓடினேன். என்னைப் பார்த்ததும் அருகில் வந்தார். ஒரு தோழனைப் போல் தோள்களை அணைத்துச் சொன்னார்... ‘உனக்கு திரைப்படத் துறை சரிப்பட்டு வராது. அதனால், ஆம்பூர் இசுலாமியா கல்லூரியில் நாளை முதல் நீ தமிழ்ப் பேராசிரியராக பணியாற்று’ என்று கட்டளையிட்டார். அன்று மாலையே என்னை வாணியம்பாடி நகருக்கு அழைத்துச் சென்று, ஒரு மகள் தனிக்குடித்தனம் போவதற்கு ஒரு தாய் என்னென்ன செய்வாளோ அவை அத்தனையும் அய்யா எனக்குச் செய்தார். பாய், தலையணை, பானை, துடைப்பம் என்று சகலத்தையும் விலைபேசி வாங்கி, அதை என் கையில் கொடுத்து, பின்னிருக்கையில் பிடித்துக்கொண்டு உட்காரச் சொல்லிவிட்டு அவரது செல்ல டி.வி.எஸ்.50-ல் அழைத்துச் சென்று ஓர் அறை எடுத்து என்னை தங்க வைத்த நினைவு இப்பவும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.

எந்த ஊர், எந்தச் சாதி, எந்த மதம் என்று எதுவுமே பார்க்காமல் என்னிடமிருந்த தமிழை மட்டுமே பார்த்து, ‘முன்னா... முன்னி...’ என்று அவர் செல்லமாக அழைக்கிற இரண்டு பிள்ளைகளோடு என்னையும் ஒரு மூன்றாவது பிள்ளையாக ஏற்று வளர்த்த அந்த உயர்ந்த மனது அய்யாவுக்கே உரியது.

அய்யாவுக்குத் திரைத் துறையில் படைப்பாளிகளை தரம் தாழ்த்தி நடத்துவதைத்தான் பிடிக்காதே ஒழிய, மற்றபடி திரைப்படங்களில் வருகிற பாடல்களில் அவர் கேட்ட நல்ல வரியைப் பற்றி என்னோடு பேசுவார். ‘மதி இந்த வரியை யார் எழுதியது. இந்தப் பாட்டு யாருடையது’ என்று ஆர்வத்தோடு கேட்கும்போது, மிகப் பெரிய கவிஞன், ‘ஒரு திரைப்பாடலில் ஒளிந்துகொண்டிருக்கிற நல்ல வரிகளை எப்படித்தான் தேடிப் பிடிக்கிறாரோ’ என்று வியந்துகொள்வேன்.

அவர் கற்பனைகளில் பயணம் செய்யும் கலாரசிகன் மட்டுமல்ல, களத்திலும் தன்னை நிரூபிக்கும் நெஞ்சுறுதிக்காரர்.தமிழீழப் பிரச்னை தொடங்கிய காலத்தில் மூன்றே நாட்களில், வாணியம்பாடியைச் சுற்றிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து ஏறக்குறைய இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்து, ஈழக் கவிஞர் காசி ஆனந்தனை அழைத்து, அவரை மேடையில் பேசச் செய்து, ஈழத் தமிழர்களுக்கு அந்தத் தொகையை நன்கொடையாக வழங்கினார். கடல் கடந்து வாழும் தமிழர்கள் மீதும் அவர் வைத்திருக்கிற அபிமானத்தை அப்போது என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட என் குருநாதர், என் தாய், என் தோழர், என் கவிக்கோவுக்கு ‘கண்ணதாசன்’ இதழைப்போல ‘அப்துல்ரகுமான்’ என்ற இலக்கிய இதழ் நடத்த விரும்பி தொடங்கினேன். பிறகு அது ‘கவிக்கோ’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. அவரது உடல்நிலை காரணமாக அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது.

அவர் என்னை வளர்த்தாரே தவிர, என் கொள்கைகளைக் கேள்வி கேட்கவில்லை. என் பயணத்துக்கு வழி காட்டினாரே தவிர, என் பாதையை மாற்றவில்லை. இதுபற்றி அவரே ஒருமுறை கூறியிருந்தார்...
‘அறிவுமதி
என் வளர்ப்பு.
ஆனால்,
என் வார்ப்பு
அல்ல!’
அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை”
ஆமாம். அவரவர் சுயம் அவருக்கன்றோ!

சந்திப்பு: சா.இலாகுபாரதி


photo courtesy: vikatan deepavali malar 2009

4 comments:

கவி இமயங்களின் பேட்டி சிலிர்ப்பூட்டியது.

கவிதை எழுதுவது அத்தனை எளிதல்ல என புரிய வைத்தது.

இரு பெருங் கவிஞர்கள்
இல்லத்தில் விருந்தாகி
இதயத்தில் அமர்ந்தனர் !

அறிவின் சிகரங்கள்
அன்பின் உருவங்கள்
ஆக்கம் ப்ல செய்தும்
அடக்கம் வாழ்வினிலே!

தமிழ் தந்த பேரே
தமிழுக்குப் பேராகி
தமிழர்க்குப் போர்வாளாய்
வாழ்வீர் நலமுடனே!

அவர் என்னை வளர்த்தாரே தவிர, என் கொள்கைகளைக் கேள்வி கேட்கவில்லை. என் பயணத்துக்கு வழி காட்டினாரே தவிர, என் பாதையை மாற்றவில்லை. இதை படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் தோன்றியது,கவிக்கோவும்,அறிவுமதி அண்ணாவும் பல்லாண்டு வாழ்க வாழ்க

அறிவுமதி அண்ணாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா

Post a Comment

கோப்பு

கோப்பு