14 January 2010

சமுதாயத்துக்கு உதவி செய்யுங்கள்... - சுதா ரகுநாதன் பேட்டி

Posted by Show Now 1:50 AM, under | No comments

கர்நாடக இசை உலகில் சுதா ரகுநாதனுக்கு என்று தனியிடம் உண்டு. இவர் குரலுக்கு உருகாத இசை ரசிகர்களே இல்லை. கார்மேகம் சூழ்ந்து ஜில்லென்று மழை பெய்தால் உடல் எப்படி குளிருமோ, அப்படி இவர் பாடக் கேட்டால் காதும் குளிரும். டிசம்பர் சீஸன் வந்தால், இவர் பாட்டு இல்லாமல் சீஸன் களைகட்டாது. ‘திரை இசையிலும், கர்நாடக இசை உலகிலும் கொடிகட்டிப் பறந்த எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை என்று சொல்லிக்கொள்வதில் பெருமையாக இருக்கிறது’ என்று சொல்லும் சுதா ரகுநாதனை பேட்டிக்காக அபிராமபுரத்தில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம். சுதாவின் வீட்டுக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட விருதுகள் நம்மை வரவேற்கின்றன. விருதுகளாலேயே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது வீட்டின் வரவேற்பறை. ‘கிட்டத்தட்ட இசைக்காகக் கொடுக்கப்படும் எல்லா விருதுகளையும் வாங்கிவிட்டீர்களோ’ என்று சந்தேகத்தோடு கேட்டால் ‘கொல்’லென்று இசையாகவே சிரிக்கிறார். டெல்லியில் ‘இந்திர பிரஸ்தா’ இசைப் பண்டிகைக்கு போய்விட்டு அப்போதுதான் வந்திருந்தவரிடம், பயணக்களைப்பு என்பதே இல்லை.

இந்திர பிரஸ்தாவைப் பற்றிச் சொல்லுங்கள்...
டெல்லி மாநில அரசும், சாகித்திய கலா பரிஷத்தும் இணைஞ்சி நடத்துறதுதான் இந்திர பிரஸ்தா. இது இசைக்கான முழு திருவிழா. இந்தியாவின் முக்கியமான மொழிகளின் இசைச் சங்கமம். இந்திய அளவுல புகழ்பெற்ற நிறைய கலைஞர்கள் வந்து பாடுவாங்க. இந்த வருஷம் நான்தான் தமிழகத்தோட பிரதிநிதி. ஒருபக்கம் இந்துஸ்தானி, மறுபக்கம் கர்நாடிக்’ன்னு இசைத் திருவிழா ரொம்ப ஜோர்” சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அடுத்த கேள்விக்கு முன்னோட்டமாக எங்கிருந்தோ அனல் மேலே பனித்துளி’ பாடல் வந்து காதில் விழுந்தது.

வாரணம் ஆயிரம்’ படத்தில், அனல் மேலே பனித்துளி’ பாடல் பாடிய அனுபவம் எப்படியிருந்தது?
‘‘இந்தப் படத்துக்கு முன்புவரைக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை கூட்டணிக்கு பாம்பே ஜெயஸ்ரீதான் ஸ்லோ மெலடி பாடல்களைப் பாடிட்டு இருந்தாங்க. ஏனோ, இந்தப் படத்துல ஒரு வித்தியாசத்தை அவங்க எதிர்பார்த்தாங்க. ரெக்கார்டிங் வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்துச்சு. மிட் நைட்லதான் ரெக்கார்டிங். பாடல் வரிகள் பார்த்தேன், அசத்தல். கவிதையா தாமரை எழுதியிருந்தாங்க. தூக்கம் போயேபோச்சு! ஹாரிஸ் சொன்னபடி பாடினேன். புதிய காம்பினேஷன் கிளிக்!”
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி
இவைதானே இவள் இனி’
- சுதாரகுநாதனின் குரலில், மனசு மழையில் நனைகிறது. வெளியேயும் மழை கொட்டத்தொடங்கியதுதான் ஆச்சரியம்! மழை வந்ததால் இந்தப் பாடல் வந்ததா? இந்தப் பாடல் பாடியதால் மழை வந்ததா?

அனல் மேலே பனித்துளி’க்குப் பிறகு சினிமாவுக்கு நிறைய பாடுகிறீர்களா?
‘‘வாய்ப்பு நிறைய வருது. ஆனா, கச்சேரி இருப்பதால் ஒப்புக்கொள்ள முடியலை. இருந்தும் இடையிடையே மூணு பாட்டு பாடிட்டேன். சூர்யா நடிக்கிற ஆதவன்’ படத்தில ஒரு பாட்டு பாடியிருக்கேன்.” என்கிற சுதா இதுவரைக்கும் சினிமாவுக்காக டஸன் பாடல்கள்தான் பாடியிருக்கிறாராம்!

டிசம்பர் சீஸன் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘ஸ்கூல், காலேஜ் டேஸ்ல ஸ்டூடன்ட்ஸ் பரீட்சைக்கு எப்படி தயாராவாங்களோ அப்படிதான். பரீட்சைக்கு பத்துநாள் முன்பாகத்தானே மாணவர்கள் படிக்கிறாங்க. நானும் அப்படித்தான். சீஸனுக்கு பத்துநாள் முன்புதான் பிரிபரேஷன்ல உட்காருவேன்.
டிசம்பர் வருதுன்னாலே எனக்கு கொஞ்சம் ஃபியர்தான். ரசிகர்களை திருப்திப்படுத்தணும். சபாக்காரர்களுக்கு ஏத்தாமாதிரி பாடணும். நான் பிரிப்பேர் பண்ணிவெச்சிருக்கிற பாடல்களைப் பாடணும். புதுசா சில ராகங்கள், கீர்த்தனைகள். இப்படி நிறைய எதிர்பார்ப்புகள். இதை எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சி கச்சேரியைக் கொண்டுபோகணும்.
முன்னாடியெல்லாம் டிசம்பர்ல இருபத்தஞ்சு கச்சேரிகள் வரை பாடிட்டிருந்தேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி பதினஞ்சிலிருந்து இருபது கச்சேரிகள் வரை பாடுறேன். டிசம்பர்’ன்னாலே 180 பாடல்களாவது தயார் செய்யவேண்டியிருக்கு. தவிர, வருஷந்தோரும் சீஸனுக்கு என்னோட ஆல்பம் ரிலீஸ் பண்ணுவேன். அதுக்காகவும் பாட்டுகள் ரெடிபண்ணணும்.
இடையில விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி மாதிரி நிறை ஃபெஸ்டிவல்ஸ். அதுக்கும் நேரம் ஒதுக்கி ரெடியாகணும்; கச்சேரிகள் போகணும். தியாகராஜர், சியாமாசாஸ்திரி போன்ற இசை பிரம்மாக்கள் கடலளவு பாடல்கள் எழுதியிருக்காங்க. பாரதி, பாரதிதாசனின் தமிழிசைப் பாடல்களும் நிறைய இருக்கு. எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும். இப்படி சீஸனுக்கு முன்னும் பின்னும் நிறை மெனக்கெடல் தேவையிருக்கு. அப்படி மெனக்கெடாட்டா கச்சேரி களைக்கட்டாது” என்கிற சுதா ரகுநாதனின் கச்சேரியில், ராகம்தான் ப்ளஸ். அவர் பாடும் பாடல்களில் ராகத்துக்குத்தான் மெயின் ரோல்.

உங்கள் கச்சேரியில் என்ன விசேஷம்?
‘‘என் பாட்டுதான். ரசிகர்களை எழுந்திரிக்காமல் உட்கார வைக்கணும்னா பாடுற ஒவ்வொரு பாட்டும் கலகலன்னு இருக்கணும். அந்தமாதிரி பாடல்களைத்தான் செலக்ட்பண்ணுவேன். என் கச்சேரிக்கு சோகமான மனநிலையில் ஃபேன்ஸ் வந்தாலும் போகும்போது மனம் நிறைய மகிழ்ச்சியோடுதான் போவாங்க. காரணம், என் பாடல்களில் ராகத்துக்கும் தாளத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து கச்சேரியை கலகலன்னு கொண்டுபோவேன். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்க்குறாங்க. நான் ஆலாபனைக்கு நேரம் அதிகம் ஒதுக்குறதில்லை. ஸ்ட்ரெயிட்டா ராகத்துக்கே போயிடுவதுதான் என் பாணி. அதுதான் விசேஷம்.”

எந்த ராகங்களை நீங்கள் அதிகம் பாடுகிறீர்கள்?
‘‘72 மேளகர்த்தா ராகத்துல பிரதிமத்திம ராகம் 36. சுத்தமத்திம ராகம் 36. நான் அதிகம் பாடுவது கல்யாணி, தர்மவதி, ஷண்முகப்ரியா மாதிரியான பிரதிமத்திம ராகங்கள்தான்.
ஒரு கூடுதல் தகவல்: நிறைய சினிமாப் பாடல்கள் பிரதிமத்திம ராகங்கள்லதான் பாடுறாங்க” என்கிற சுதா ரகுநாதன் தமிழ் உட்பட தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி என்று கிட்டத்தட்ட 10 பத்து மொழிகளில் பாடுவார்.

பாட்டுக்கு எது முக்கியமாக நீங்கள் கருதுகிறீர்கள்?
‘‘எமோஷன். ப்பாவம்தான். ப்பாவம் இல்லாம பாடினா உப்புச்சப்பு இல்லாத சாப்பாடுமாதிரிதான் பாட்டும். மேகத் திரள்கள் ஒன்றுகூடி மழை பொழிகிறமாதிரி எமோஷன் இருக்கணும். அப்படி பாடினா வராத மழையும் வரும்” வெளியில் மழை இன்னும் ஜோராகக் கொட்டிக்கொண்டிருந்தது.

உங்கள் குருவைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘இந்த இசைத் துறையில் நான் இவ்வளவு தூரம் வளர்ந்தது, புகழ் பெற்ற பல விருதுகள் பெற்றதெல்லாம் என் குரு இல்லாம நடந்திருக்காது. இசைத் தவிர, வாழ்க்கைக்கு எது நல்லது? எது தேவையற்றது’ன்னு எனக்கு சொல்லி கொடுத்ததும் என் குரு எம்.எல்.வி’தான். எனக்கு கிடைத்த புகழையும் விருதுகளையும் அவங்களுக்கு காணிக்கையாக்குறேன்.” அடக்கம் தெறிக்கப் பேசும் சுதா, இசைக்கு சேவை செய்யும்நேரத்தில், கொஞ்சம் சமுதாயத்துக்கும் சேவை பண்ணவேண்டும்’ என்கிறார். சமூகசேவைக்காகவே சமுதாய அறக்கட்டளை’ என்ற பெயரில் டிரெஸ்ட் நடத்தி வருகிறார்.

சமுதாய அறக்கட்டளைப் பற்றிச் சொல்லுங்கள்..?
‘‘1999-ல் அறக்கட்டளை தொடங்கினேன். இப்போ பத்தாண்டு ஆகியிருக்கு. பல லட்சங்களை இந்த டிரெஸ்ட் மூலமா சமுதாயத்துக்கு வழங்கியிருக்கோம். அறக்கட்டளை மூலமா செய்ற உதவிகளுக்கு என்னோட நண்பர்கள்தான் அதிகம் உதவறாங்க. அவங்களோட உதவியை முக்கியமா குறிப்பிடணும். குழைந்தைகளுக்காகத்தான் நிறைய செய்றோம். மருத்துவ உதவி. ஆதரவற்ற குழைந்தைகளுக்கு உதவி, கல்வி உதவின்னு குழந்தைகளுக்குதான் முக்கியத்துவம் தர்றோம். அவங்க நல்லா இருந்தாத்தானே நாடு நல்லா இருக்கும்.
கொளத்தூர்ல இருக்குற ‘அருணோதயம்’ ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துல ஒரு ரூம் கட்றதுக்காக கடந்த ஆண்டு ஐந்து லட்சம் வழங்கினோம். பெங்களூர்ல ‘உன்னத்தி’ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அங்க வறுமையால பாதிக்கப்பட்டவங்க, படிப்பறிவு இல்லாதவங்க, ஏழைக் குழந்தைகள்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு உணவுக்கே மூவாயிரம் ரூபாய் செலவாகும். நாங்க அஞ்சு நாள் உணவு செலவுக்கு எங்களால் முடிஞ்ச உதவியை இந்த வருஷம் செஞ்சோம். கடந்த வருஷம் ராமச்சந்திரா மருத்துவமனை மூலமா 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய 50 லட்சம் தந்தோம். அதுல என் சொந்த பணம் 25 லட்சம். அந்த நிகழ்ச்சியில எஸ்.எம்.கிருஷ்ணா வந்து கலந்துகிட்டார். இதுவரைக்கும் 75 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை முடிஞ்சிருக்கு. இன்னும் பல மைல் தூரம் போகவேண்டியிருக்கு. இதெல்லாம் மக்களுக்கு தெரியணும்னு சொல்லலே. எல்லாரும் தங்களால முடிஞ்ச உதவியை சமுதாயத்துக்கு செய்யணும்னுதான் சொல்றேன்.” வெளியே மழை விட்டிருந்தது. சமுதாய அறக்கட்டளையின் சேவை சமுதாயத்துக்கு தேவை.

சந்திப்பு: சா.இலாகுபாரதி
(2009 – விகடன் தீபாவளி மலருக்காக எடுக்கப்பட்ட பேட்டி)

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு