01 September 2008

நதியான காதல்கள்

Posted by Gunalan Lavanyan 1:39 PM, under | 2 comments

அது மலைகளால் நிறைந்த கிராமம். குழந்தைகள் வட்டமாக நின்று கை கோர்த்து ஆடும் ஆட்டத்தைப்போல அந்த கிராமத்தைச் சுற்றி மலைகள் கைகோர்த்து நின்று ஆடும் ஆட்டம் அலாதியானது. பனிக்காலத்தில்தான் அதன் அழகை தரிசிக்க முடியும். அப்போது மலை பனி ஆடை கட்டிய தேவதையாக காட்சியளிக்கும்.மார்கழித் திங்களில் பனி படர்ந்த இரவுகளில் ஊரின் தெருக்களெங்கும் கோல மழையில் நனைந்துகொண்டிருக்கும்... பெண்கள் ஒன்றுகூடி இன்று நான் இந்தக் கோலம் போடுகிறேன். நீ எந்தக் கோலம் போடுவதாக உத்தேசம்..? அவள் மயில் கோலம் போடப்போகிறாளாம்..! அக்கா நீங்கள்... என்று குழுவாகக் கூடி நின்று, விளித்துப் பேசும் பெண்களின் கோல உற்சவம் மார்கழி மாதத்தில்தான் விமரிசையாக நடைபெறும். கோலம் என்றால் சரளைக் கற்களைப் பொடியாக்கிப் போடும் கோலமல்ல. பச்சரிசியை ரவைப் பதத்தில் உரலில் இடித்துப் போடும் மாக்கோலம்.ஊர் பெண்களுக்கு கோலமென்றால் கொள்ளை ப்ரியம். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போகும்போது தோழியைப் போல் கோல நோட்டையும் உடன் எடுத்துச் செல்லும் அளவுக்கு ப்ரியம். பருவம் எய்திய பெண்களுக்கு சமைப்பதையடுத்து கோலம் போடுவதே தொழில். கம்பிக்கோலம், பூக்கோகலம், வண்ணக்கோலம் என்று வகைவகையாய் கோலம் இடும் பெண்களின் கன்னக்குழியின் கோலம் அழகின் உச்சக்கோலம்.கற்பனை நிறைந்த அவர்களின் விரல் இடுக்குகளிலிருந்து துளித்துளியாக அச்சுகள் பூமியை முத்தமிடும். ஈரம் நிறைந்த பூமியில் முத்தமும் சேர்ந்து கரைந்துபோகும். பின் புள்ளிகள் ஒன்றுகூடி கோலம் தன்னைத்தானே வரைந்துகொள்ளும்.அதிகாலையில்தான் பெண்கள் கோலமிடுவது வழக்கம். கூதிர்க்கால அதிகாலைகளிலோ, பனி ராட்சஸனாகி தலையில் ஏறி உட்கார்ந்து உடலை கவ்விப்பிடித்து உலுக்கிவிடும் என்பதால் பெண்கள் இரவிலேயே கோலம் இட்டு முடித்து, பறவைகள் கூடு தேடி அடைக்கலம் அடைவதைப்போல், வீட்டில் போர்வையைப் போர்த்தி உறங்கத் தொடங்கிவிடுவார்கள். மாடி வீடு உள்ளவர்கள் பனிக்காலங்களில் நடுக்கமின்றி குளிருக்கு அடக்கமாக இருப்பார்கள். ஆனால், கூரை வேய்ந்த வீட்டில் வசிப்பவர்களும், ஓட்டு வீட்டில் குடியிருப்பவர்களும் மழையில் நனைந்த கோழியைப்போல் பனியில் நனைந்து வெடவெடத்துக் கிடப்பார்கள். போர்வை, கம்பளி என்று எதைப் போர்த்தினாலும் குளிர் அடங்கவே அடங்காது; பற்கள் கிடுகிடுவென ஆடத்தொடங்கும்.அப்படிப்பட்ட பனிக்காலத்தில் அந்த ஊரின் இயற்கை அழகு காண்பதற்கு அரிய காட்சியாக இருக்கும். ஆனாலும், முதுமை தாங்கிய வயசாளிகளுக்கு, அழகெல்லாம் ஒரு பொருட்டல்ல. பனி எப்போது போகும் என்று போர்வைக்குள் ஒடுங்கிக் கிடப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே என்று இருப்பார்கள். பனி என்றால் அவர்களுக்கு மேல் அன்னமும் கீழ் அன்னமும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்துவிடும்.ஆனால், பருவம் வந்த பெண்களுக்கும் இளமைப் பொங்கும் காளையருக்கும் பனிக்காலம்தான் காதல் பூக்கும் வசந்தகாலம். அப்போதுதான் காதல் மொழி பேசுவதற்கு & வெண்பனி சிந்தும் மாலைகள், பச்சைப் பூத்த பசுஞ்சோலைகள், வண்ண மலர்கள் தூவி வரவேற்கும் பூங்காக்கள் என்று காதலர் கூடும் இடங்கள் தோறும் ஆளரவமற்று காதலரின் வருகையைப் பார்த்து காத்துக் கிடக்கும். காதலர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதில் அவைகளுக்கு அப்படியென்ன ஆனந்தக் களிப்போ... அதைக் காதலர்தான் அறிவர்!அப்படி வழக்கமாய் குளிர் இரவுகளின் நடுக்கத்தில் தாவணிகள் கோலத்துக்கு புள்ளி வைக்க, அப்புள்ளிகள் இளங்காளைகளை மான்களாக்கிவிடும். புள்ளிகள் ஒவ்வொன்றும் புள்ளி மான்களாகி, காதல் புல் மேய இதய வனத்தைத் தேடி, சதா சர்வகாலமும் துள்ளியலையும் பணிக்கு ஆட்பட்டுப் போகும்.பெண்களின் வீட்டு வாசற் கோலப்புள்ளிகள், ஆண்களின் இதய வாசலில் நிறைந்து வண்ணங்கள் தூவிய கலர்க் கோலமாகிவிடும். காதல் பதற்றத்தில் காளையர்களின் நெஞ்சப் படபடப்புக் கூடி, காதல் குளிரெடுக்கும். காட்சியின் திசைகள் நோக்கி, கண்கள் கரைந்து நதியாவதும் உண்டு.
உன் விரல்களிலிருந்து விழும்புள்ளிகளில்
என் நெஞ்சத்தின் ஏக்கப்
பெரும்புள்ளிகள்
கூடிக்கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொருமுறை நீ புள்ளி இடுகையிலும்
சொல்ல நினைக்கிறேன்.
ஆனாலும், உன் பார்வைக் கரும்புள்ளிகளில் சிக்கி
என் வார்த்தைச் சிறுபுள்ளிகள்
மூழ்கி
கோலம்
முற்றாகிவிடும்போது
எப்படி முடியும்
என்னால்
அந்த மூன்றெழுத்தை உச்சரிக்க.

2 comments:

nalla rasamana asal kaathalai kaana mudigiradu.

உங்கள் கோலங்கள் அருமை , பருவம் எய்திய பெண்கள் என்ற அடிகோடல் தேவை இல்லாதது , சினிமா கவிஞர்கள் பாதிப்பு உங்கள் படைப்பை பாதிக்கும்

Post a Comment